Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

உடற்பயிற்சி செய்வதற்கான உத்வேகம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?

உடற்பயிற்சி செய்வதற்கான உத்வேகம் எனக்கு எப்படிக் கிடைக்கும்?

 நான் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

 சில நாடுகளில் இருக்கும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்குக் கொஞ்ச நேரம் மட்டுமே ஒதுக்குவதால், அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், “உடற்பயிற்சி நன்மை தரும்” என்று பைபிள் சொல்வது எவ்வளவு சரியாக இருக்கிறது, இல்லையா? (1 தீமோத்தேயு 4:8) இதைப் பற்றி யோசித்துப்பாருங்கள்:

  •   உடற்பயிற்சி புத்துணர்ச்சி தரும். உடற்பயிற்சி செய்யும்போது, ‘எண்டார்பின்ஸ்’ என்ற ஹார்மோன்கள் நம் மூளையில் சுரக்கின்றன. அவை நமக்கு சந்தோஷத்தையும் இதமான உணர்வையும் தருகின்றன. அதனால்தான், உடற்பயிற்சியை மனச்சோர்வை நீக்கும் இயற்கை மருந்து எனபதாகச் சிலர் சொல்கிறார்கள்.

     “காலையில எழுந்த உடனே உடற்பயிற்சி செய்றதுக்காக ஓடுவேன். அதனால, அந்த நாள் முழுசும் நல்லா வேலை செய்ய முடியுது, சந்தோஷமாவும் இருக்க முடியுது. இப்படி ஓடுறப்போ புத்துணர்ச்சி கிடைக்குது.”—ரெஜினா.

  •   உடற்பயிற்சி உங்களை அழகாக்கும். அளவான உடற்பயிற்சி, உங்களுக்குப் பலத்தையும் ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும்.

     “இப்பெல்லாம் ஒரேதடவையில 10 புல்-அப்ஸை செய்ய முடியுது. ஆனா, ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னால ஒண்ணுகூட செய்ய முடியல. இத நினைக்கிறப்போ சந்தோஷமாக இருக்கு. முக்கியமா, என் உடம்ப இப்ப நான் நல்லா பார்த்துக்குறேன்.”—ஒலிவியா.

  •   உடற்பயிற்சி உங்கள் ஆயுளைக் கூட்டும். சுறுசுறுப்பாக இருந்தால், இதயம் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அவ்வளவாக வராது. ஏரோபிக் உடற்பயிற்சியைச் செய்தால், இதயத்தமனி நோய் வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, நிறைய பேர் சாவதற்கு இந்த நோய்தான் காரணம்.

     “தவறாம உடற்பயிற்சி செய்றப்போ, நமக்கு இந்த உடலை கொடுத்த படைப்பாளருக்கு நன்றி காட்ட முடியும்.”—ஜெசிக்கா.

 சுருங்கச் சொன்னால்... உடற்பயிற்சி செய்யும்போது எதிர்காலத்தில் அவ்வளவாக நோய்கள் வராது, இப்போதேகூட திருப்தியாக இருக்கலாம். “ ‘அந்த நடை பயிற்சிய இல்லனா ஓட்ட பயிற்சிய அன்றைக்கு ஏன்தான் செஞ்சேனோ’னு நீங்க சொல்லவே மாட்டீங்க. சாக்குப்போக்கு சொல்லாம எப்பெல்லாம் உடற்பயிற்சி செய்றேனோ, அப்பெல்லாம் எனக்கு நன்மைதான் கிடைச்சிருக்கு” என்று சொல்கிறார் டான்யா.

காரை பராமரிக்கவில்லை என்றால், கடைசியில் அது ஓடாமல் நின்றுவிடும். உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், உங்கள் உடலுக்கும் அதே நிலைமைதான் வரும்

 நான் ஏன் உடற்பயிற்சி செய்வதில்லை?

 இவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம்:

  •   ஆர்வக்குறைவு. “இளமையா இருக்குறப்போ, திடகாத்திரமா இருக்குறதா மக்கள் நினைச்சிக்குறாங்க. எதிர்காலத்துல உடல் பலவீனமாகுறதுக்கான வாய்ப்பிருக்கிறத அவங்க நினைச்சு பார்க்குறதில்ல. வயசானவங்களுக்குதான் உடற்பயிற்சி தேவைனு நினைக்குறாங்க.”—சோஃபியா.

  •   நேரமில்லாமை. “வாழ்க்கை ரொம்ப பிஸியா இருக்குறதால, நல்ல சாப்பாடு சாப்பிடுறதுக்கும் நல்லா தூங்குறதுக்குமே நேரம் கிடைக்குறது கஷ்டமா இருக்கு. இந்த நிலைமையில, உடற்பயிற்சி செய்றதுக்கு நேரம் ஒதுக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.”—கிளெரிஸா.

  •   ஜிம்முக்குப் போக முடியாத நிலைமை. “உடம்ப நல்லா வைச்சுக்கணும்னா காசை அள்ளிக் கொட்டணும். காசு இல்லாம யாரு ஜிம்முக்குள்ள விடுவாங்க?”—ஜினா.

 யோசித்துப்பாருங்கள்:

 உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவதற்கு எது மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது? அதைத் தூக்கியெறிய நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால், உங்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 உடற்பயிற்சி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?

 இதோ, சில ஆலோசனைகள்:

  •   உங்கள் ஆரோக்கியத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.—கலாத்தியர் 6:5.

  •   சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள். (பிரசங்கி 11:4) உதாரணத்துக்கு, ஜிம்முக்குப் போனால்தான் உடற்பயிற்சியை ஆரம்பிக்க முடியும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிற ஏதோவொரு உடற்பயிற்சியை ஆரம்பித்து, அதை விடாமல் செய்யுங்கள்.

  •   உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 20:18.

  •   திட்டவட்டமான நேரத்தை ஒதுக்குங்கள். சில இலக்குகளை வைத்து, அதில் எந்தளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்பதைக் குறித்துவையுங்கள். அப்போது, தொடர்ந்து செய்வதற்கான உந்துதல் கிடைக்கும்.—நீதிமொழிகள் 21:5.

  •   உங்களோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கு யாரையாவது கண்டுபிடியுங்கள். அப்போது, தொடர்ந்து செய்வதற்கான உற்சாகம் அவரிடமிருந்து கிடைக்கும்.—பிரசங்கி 4:9, 10.

  •   உங்கள் முயற்சியில் பின்னடைவு ஏற்படலாம் என்பதை எதிர்பாருங்கள். அப்படியாகும்போது, சோர்ந்துபோய் விட்டுவிடாதீர்கள்.—நீதிமொழிகள் 24:10.

 அளவோடு உடற்பயிற்சி செய்யுங்கள்

 ஆண்களும் சரி, பெண்களும் சரி ‘பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாக’ இருக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 3:2, 11) அதனால், அளவோடு உடற்பயிற்சி செய்யுங்கள். அளவுக்குமீறி போகிறவர்களுக்கு பிரச்சினைகள்தான் வரும். “ஒருத்தரோட உடல் தோற்றம் எப்படி இருக்குதுங்குறதவிட, அவர் நல்லா சிந்திக்க தெரிஞ்சவராங்குறதுதான் முக்கியம். அப்படிப்பட்டவரதான் எனக்கு பிடிக்கும்” என்று சொல்கிறார் ஜூலியா என்ற இளம் பெண்.

 அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யத் தூண்டுகிற சில வாசகங்களைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அவற்றை நம்பினால், உங்கள் ஆரோக்கியம் ஆட்டங்கண்டுவிடும். ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ கவனம் கொடுக்காதபடி உங்களைத் தடுத்துவிடும்.—பிலிப்பியர் 1:10.

 சொல்லப்போனால், இந்த மாதிரியான வாசகங்கள், உங்களுக்கு நன்மையைத் தருவதைவிட கெடுதலைத் தந்துவிடும். விரா என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “நிறைய பொண்ணுக, யாரு மாதிரி இருக்கணும்னு ஆசப்படுறாங்களோ, அவங்களோட ஃபோட்டாக்கள வைச்சிக்கிறாங்க. உற்சாகம் குறையறப்போ, அந்த ஃபோட்டோக்கள பார்த்துக்குறாங்க. ஆனா கடைசில, தங்கள அவங்களோட ஒப்பிட்டு பார்த்து சோர்ந்துதான் போறாங்க. உங்களோட தோற்றத்த மட்டுமில்ல, ஆரோக்கியத்தயும் பார்த்துக்குறதுதான் உங்க குறிக்கோளா இருக்கணும். அதுதான் நல்லது.”