Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

வீட்டிலிருந்தே நன்றாகப் படிப்பது எப்படி?

வீட்டிலிருந்தே நன்றாகப் படிப்பது எப்படி?

 இன்று நிறைய மாணவர்களுக்கு வீடே வகுப்பறை ஆகிவிட்டது. உங்களுக்கும் அப்படித்தானா? அப்படியென்றால், இந்த சூழ்நிலையில் நீங்கள் எப்படி நன்றாகப் படிக்கலாம்? இதோ, சில ஆலோசனைகள்! a

 நீங்கள் வெற்றி பெற ஐந்து டிப்ஸ்

  •   அட்டவணை போடுங்கள். நீங்கள் ஸ்கூலுக்குப் போகும்போது எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்வீர்களோ அப்படியே எல்லாவற்றையும் செய்ய முயற்சி பண்ணுங்கள். படிப்பதற்கும், வீட்டு வேலைகள் செய்வதற்கும், மற்ற முக்கியமான விஷயங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். தேவைப்படும்போது இதில் நீங்கள் மாற்றம் செய்துகொள்ளலாம்.

     பைபிள் ஆலோசனை: ‘எல்லா காரியங்களும் . . . ஒழுங்காக நடக்க வேண்டும்.’—1 கொரிந்தியர் 14:40.

     “நீங்க ஸ்கூல்ல இருக்குற மாதிரியே நினைச்சுக்கோங்க. எல்லாத்தயும் அந்தந்த நேரத்துல செய்யுங்க.”—கேட்டி.

     யோசித்துப் பாருங்கள்: ஒரு அட்டவணை போட்டு, உங்கள் பார்வையில் படும்படி வைப்பது ஏன் நல்லது?

  •   சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, செய்ய வேண்டிய விஷயங்களை செய்துதான் ஆக வேண்டும்! இதைப் புரிந்துகொண்டால்தான் உங்களால் பக்குவம் அடைய முடியும். அதனால், எதையும் தள்ளிப்போடாதீர்கள்!

     பைபிள் ஆலோசனை: “சுறுசுறுப்பாக இருங்கள், உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள்.“—ரோமர் 12:11, அடிக்குறிப்பு.

     “எதையாவது செய்ய பிடிக்காதப்போ மனச மாத்திக்கிட்டு அத செய்யறது ரொம்ப கஷ்டம். ஹோம்வர்க்கை அப்புறம் செஞ்சுக்கலாம்னு மொதல்ல தோணும். ஆனா, அப்புறம் செய்யவே மாட்டோம். கடைசில, எல்லாமே தலைக்குமேல குவிஞ்சிடும்.”—அலெக்ஸான்டிரா.

     யோசித்துப் பாருங்கள்: தினமும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஹோம்வர்க் செய்வது உங்கள் சுய கட்டுப்பாட்டை எப்படி வளர்க்கும்?

  •   படிப்பதற்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தேவையான எல்லாவற்றையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள். அந்த இடம் படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும், ஆனால் தூக்கம் வரும் அளவுக்கு சொகுசாக இருக்கக் கூடாது. படிப்புக்கு ஒதுக்குவதற்காகத் தனி இடம் இல்லையென்றால், வேறு ஏதாவது அறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     பைபிள் ஆலோசனை: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.”—நீதிமொழிகள் 21:5.

     “பாஸ்கட்பால், வீடியோ கேம்ஸ், கிட்டார் எல்லாத்தயும் வேற பக்கம் எடுத்து வெச்சிடுங்க. உங்க ஃபோனையும் சைலண்ட்ல போட்டுருங்க. படிக்கிறப்போ எதுவுமே உங்க கவனத்த சிதறடிக்க கூடாது.”—எலிசபெத்.

     யோசித்துப் பாருங்கள்: படிப்பில் முழு கவனம் செலுத்துவதற்கு, படிக்கும் இடத்தில் நீங்கள் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்?

  •   ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த பழகுங்கள். ஒரே நேரத்தில் நிறைய விஷயங்களை செய்ய முயற்சி செய்தால், நீங்கள் தவறுகள் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. அதோடு, உங்கள் வேலைகளை முடிக்கவும் அதிக நேரம் ஆகும்.

     பைபிள் ஆலோசனை: “உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:16.

     “பக்கத்துல ஃபோன் இருந்துச்சுனா எதுலயுமே உருப்படியா கவனம் செலுத்த முடியாது. தேவையில்லாததை எல்லாம் செஞ்சு நேரத்த வீணாக்கிட்டு இருப்பேன்.”—ஒலிவியா.

     யோசித்துப் பாருங்கள்: ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் நேரத்தைப் படிப்படியாக உங்களால் அதிகமாக்க முடியுமா?

  •   அவ்வப்போது வேறு ஏதாவது செய்யுங்கள். வாக்கிங் போங்கள், சைக்ளிங் செய்யுங்கள், அல்லது ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த வேறு எதையாவது செய்வதும் உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும். “ஆனால் செய்ய வேண்டியதை முதலில் முடித்துவிடுங்கள். அப்போதுதான் இன்னும் சந்தோஷமாகப் பொழுதைப் போக்க முடியும்” என்று சொல்கிறது ஸ்கூல் பவர் என்ற புத்தகம்.

     பைபிள் ஆலோசனை: “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”—பிரசங்கி 4:6.

     “ஸ்கூல்ல கிட்டார், பியானோ மாதிரி எதையாவது வாசிக்க கத்துக்கலாம். இல்லன்னா டிராயிங் க்ளாஸ், பெயின்டிங் க்ளாஸ்னு எதிலாவது சேரலாம். நான் அதயெல்லாம் செய்யாம போயிட்டேனே-னு பின்னால ரொம்ப வருத்தப்பட்டேன். படிக்கிறதோட இந்த மாதிரி விஷயங்களயும் செய்றது ரொம்ப நல்லது.”—டேலர்.

     யோசித்துப் பாருங்கள்: இடையிடையே என்னென்ன செய்தால் படிப்பில் உங்களால் கவனம் செலுத்த முடியும்?

a தொலைதூரக் கல்வி, ஆன்லைன் கல்வி என நிறைய வழிகளில் மாணவர்கள் படிக்கலாம். நீங்கள் எந்த வழியில் படித்தாலும் சரி, இந்தக் கட்டுரையில் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்திப் பாருங்கள்.